யாருக்கு யாரோ ?

                                                        Image result for களிமண்  பொம்மை                                          
                         செய்யூர் என்னும் கிராமத்தில் வரதன், கோலப்பன் ,விக்கிரமன் என்னும் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.                                                                                                                                              
                 வரதன் பெருந்தொப்பையுடன், சற்று குள்ளமான உருவமுடையவனாய், பதத்துக்கு மீறி வறுக்கப்பட்ட கோதுமையின் நிறத்தில் இருப்பான். இடதும் வலதுமாக சற்று ஆடி ஆடி அவன் நடந்து வருகையில் ,பலர் மனதுக்குள்ளும்,சிலர் வெளிப்படையாகவும் அவன் தோற்றத்தையும்,நடையையும் பரிகாசம் பண்ணுவது வழக்கம்.அவன் சட்டி ,பானை செய்யும் குயவன்.                                                                                                                       
                    கோலப்பன், தோற்றத்தில் வரதனுக்கு நேர் எதிர்மறையாக இருப்பான்.நெடுநேடுவென்று  வளத்தியாக,சதையை சுத்தமாக வழித்தெடுத்தது போல ஒடுங்கிய உடல் கூறு.சாரை பாம்பு போல விறு விறுவென்று,சுறுசுறுப்பாக வேக நடை கொண்டவன்.’எம்புள்ள ஒண்ணும் கருப்பு கெடையாது மாநெறந்தேன்’ என்று பெருமை பீத்தி கொள்வாள் அவன் தாய் .தறியில் நூல் நூற்கும் வேலை.எதையும் நேர்த்தியாக செய்யும் கைத்திறன் மிக்கவன்.                                                                                                                       
                 விக்கிரமன் கட்டுமஸ்தான உடல்வாகுடன் காண்போர் கண்ணை கவரும் தோற்றம் கொண்டவன்.பொன் நகை செய்யும் ஆசாரியாக வேலை செய்து வந்தான்.                                                  
       ஒரு நாள் வரதன் பானைகளை எண்ணி எடுத்து வைத்து விட்டு,மீதமிருந்த களிமண்ணில் ஒரு அழகிய பெண் பொம்மையை வடிவமைத்தான்.தன நண்பர்களிடம் அதை காண்பித்தான்.அவர்கள் ஒரு சேர,”டேய், ரொம்ப பிரமாதமா இருக்குடா. நா இதுக்கு உடுத்தறதுக்கு உடை தயாரிச்சிட்டு வரேன் என்றான் கோலப்பன்.உடனே விக்கிரமனும் நா நகை செஞ்சிகிட்டு வரேன் என்றான்.                                                                                                                                     இதுக்கு மட்டும் உயிர் இருந்தா எப்புடி இருக்கும்?”என்றனர்.அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு குகையில் இருக்கும் சாமியாரிடம் சென்றனர்.”சாமி ,உங்களோட மந்திர சக்தியால இதை ஒரு உயிருள்ள பொண்ணா மாத்த முடியுமா?”என்று கேட்டனர்.அவரும் அவ்வாறே ஆகட்டும் என்று சில மந்திரங்களை உச்சரித்தார்.உடனே அந்த பொம்மை ஒரு அழகிய கன்னிகையாக வனப்புடன் மனதை கொள்ளை கொள்பவளாய் உரு மாறி நின்றாள்.மூவருக்கும் அவளை தனக்கே சொந்தமாக்கி கொள்ள ஆசை வந்தது.சண்டை மூண்டது.
          வரதன், ”சாமி, நான்தான் இவள உருவாக்கினேன்,இவள் எனக்கு தான் சொந்தம்” என்றான்.”இல்லை இல்லை, அவள் மானம் காக்க நான் தான் உடை கொடுத்தேன்,அவள் எனக்கு தான்” என்றான் கோலப்பன்.விக்கிரமன் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக நின்றான்.
      சாமியார் ,” விக்கிரமனுக்கு தான் அவள் மனைவியாவாள்” என்றார். 
     அதெப்புடி,சாமி ,செஞ்சவன் நா இருக்க அவனுக்குனு நீங்க தீர்ப்பு சொல்லலாம் நா ஒத்துக்க மாட்டேன் என்றான் ........சரியான விளக்கம் கொடுக்கலைனா யாருக்கும் இல்லாம அவள நா இந்த எடத்திலேயே பொலி போட்டுடுவேன் ,ஆத்திரத்தில் அறிவிழந்து கூப்பாடு போட்டான் .பெண்ணாசை வந்து விட்டால் மதியிழக்க தானே செய்யும் .சிறந்த சிவ பக்தன் இலங்கேஸ்வரனை அழித்ததே இந்த பெண்ணாசை தானே ,இவர்கள் எம்மாத்திரம்.
  சாமியார் , “அட பதர்களே! கேளுங்கள் என் விளக்கத்தை..அடேய்! வரதா ! நீ இவளை உருவாக்கியதால் நீ இவளுக்கு தகப்பன் ஸ்தானத்துக்கு ஒப்பாவாய்.கோலப்பன் மானம் காக்க உடை கொடுத்ததால் அவன் சகோதரனானான்.ஆனால் விக்கிரமன் நகை செய்து போடும் போது தாலியும் போட்டுவிட்டான், அதனால் அவனே அவளுக்கு கணவனாவான்” என்று விளக்கத்தை முடித்தார்.         
     [ கதைக்கரு, முப்பது வருடங்களுக்கு முந்தையது - மூளையின் மூலையில் ஒரு செல்லில் மங்கலாக பதுங்கியிருந்ததை ரீமேக் செய்துள்ளேன்]

----தாமரை குணாளன் ---


Comments

Popular posts from this blog

கர்மா

BOLD Vs BEAUTY