மடந்தை



மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’  [15 -18]
   வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பது போல் சொல்லொணாத்துயரங்கள் இல்லாத மானுடபிறவியே இல்லை எனலாம். எல்லாக் கடின முயற்சிகளும் தோற்ற பின்னரே ஜாதகம் ,ஜோசியம் , பூஜைகள் ,வண்ண வண்ணமாய் அதிர்ஷ்ட கற்கள் என மனித மனம் அடைக்கலம் தேடும்.அப்படி நிர்கதியாய் நின்ற ஒரு வயது முதிர்ந்த உறவினருக்காக ‘அவளுடைய ‘ தாய் அந்த 40  வயது ஜோசியரை வீட்டுக்கு வரவழைத்தார் .ஆர்வக்கோளாறாகிய அவள் பெரியவர்களுடன் அமர்ந்து ஒன்றும் புரியாவிடினும் வாய் பார்த்து அமர்ந்திருந்தாள்.அவர்களுக்கு பல விஷயங்களை விளக்கி சொல்லும் போதே “பாப்பா யாரு?என்ன படிக்குது? என்றவாரே செல்லமாய் முகவாய் தொட நீண்ட கைகளிலிருந்து வெடுக்கென நகர்ந்து அமர்ந்தாள். வயதுக்கு மீறிய ‘முதிர்ச்சி மூளை’ அவரை கண்காணிக்க தொடங்கியது .ஆனால் முழுமையாக ,தெளிவாக விளங்கவில்லை.அந்த உறவினரின் மகனுக்கு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்துக் கொண்டே “நீங்க என்ன பண்ணுங்க , பெண் பாக்க போகும்போது அந்த பெண்ணோட பேச்சு குடுத்துகிட்டே இப்படி தொட்டு பாருங்க” என சட்டென்று அந்த 15 வயது மடந்தையின் வலது கால் முட்டிக்கு அரை அடி மேலே தொடையில் அழுத்தமாக கை பதித்து எடுத்தான்.பல நூறு வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் மின்கம்பத்தின் மொத்த மின்சாரத்தையும் உடலில் வாங்கியது போல உடல் நடுங்கி மனமெல்லாம் ரணமாகி துக்கம் தொண்டை அடைக்க ,பார்வை அப்பெண்களின் பக்கம்  திரும்பியது.ஆனால் மேலும் ஜோசியரை பரிகாரம் கேட்பதிலும் மற்ற விஷயங்களை அலசுவதிலும் அவர்கள் முனைப்பாய் இருந்ததால் இந்த அபாண்டத்தை அனுசரிப்பார் எவருமிலர்.
       வெடுக்கென்று எழுந்து புறக்கடை சென்றாள். பல வலியான தருணங்களுக்கும்  , ரகசிய கண்ணீருக்கும் வடிகாலாகவும் ,சலனமற்ற மயான மனதுக்கும் ,புதிய யுக்திகள் மூளை யில் உதிக்கும் இடமாகவும் விளங்குவது “””கழிவறை “ தான்.குட்டி போட்ட பூனையாய் கோபமாய் குறுக்கும் நெடுக்கும் அலைந்து , தமக்கையின் வருகைக்காக அந்தி சாய தவம் கிடந்தாள்.கல்லூரி முடிந்து களைத்து வருவதை புரியாதவளாய்,”அக்கா, அக்கா , ஒரு விஷயம் சொல்லணும் க்கா” என்று பாவாடை பிடித்து இழுத்தாள்.” இரு வர்றேன் “ என மறைந்தாள்.இயலாமையும் ,பகிர முடியாத விரக்தியும் “கோபக்கார பிசாசை மேலும் பேயாக்கியது.லாவா குழம்பை உள்ளடக்கிய எரிமலை போல இரவு வரை சுற்றிக்கொண்டிருந்தாள்.
     இரவு உணவுக்கு போகாத போதுதான் தமக்கையின் கவனம் அவள் மேல் திரும்பியது ,”என்ன பாப்பு, என்னவோ சொல்லணும் னியே ,”என்றாள்.விஷ[ய]த்தை  கக்கினாள்.மற்றவர்களுக்கு செய்தி பரவ ,அனைவரும் சொன்னது ,”ச்சீ ,ச்சீ ! அதெல்லாம் ஒண்ணும் தப்பான எண்ணத்துல பண்ணிருக்க மாட்டாரு ,சின்ன பிள்ளை தானேனு யதார்த்தமா நடந்திருப்பாரு” என தீர்ப்பு வழங்கப்பட்டது.
      உருத்தலுடனேயே வருடங்கள் கழிந்தது.ஒரு வேளை மற்றவர்கள் சொல்வது போல் சாதாரணமான நிகழ்வை நாம் தான் பெரிதாக்கி ரணபடுத்தி கொண்டோமா என மனம் போராடியது. இருந்தும் சரியென ஏற்க முடியவில்லை.தொடுதலின் உள்நோக்கத்தை தெள்ளென அறியும் திறன் பெண்மைக்கு உண்டு.ஆன்மா ஏற்காத விளக்கங்களுக்கான வினாக்களை பிரபஞ்சத்தில் அள்ளி இறைத்து விடைக்கு காத்திருப்பது அவளுக்கு வழக்கம்.இம்முறையும் அதே தவம்.18 வயதில் கல்லூரி முதல் ஆண்டு ,பலவித பெரும் புரட்டி போடும் வாழ்வியல் மாற்றங்களில் இந்த நிகழ்வு நீர்த்து போக தொடங்கினாலும், அவ்வ போது வந்து நினைவூட்டி விடை தேடியது.
      கைபேசியற்ற காலகட்டம்.3 நிமிடத்திற்கு 1 ரூபாய் என்னும் ட்ரங்க் கால் தான்.வாரத்திற்கு 3 முறையாவது வீட்டிலிருந்து போன் வந்துவிடும்.
     ஒரு நாள் தாயும் ,தமக்கையும்,” பாப்பு , ஞாபகம் இருக்கா, நாலு ,அஞ்சு வருடத்துக்கு முன்னாடி ஒரு ஜோசியர் நம்ம வீட்டுக்கு வந்தாரே?”.மறப்பேனா எத்தனை பிறவி எடுத்தாலும் ,மனதுக்குள் சொல்லி கொண்டே ,” ஆமா ,அந்தாளுக்கு என்ன இப்போ” என்றாள் .” முந்தா நாள் வந்திருந்தாரு ,என்னன்னே தெரியல அவரோட இடது கை அழுகி போயிருந்துச்சு ,ஆஸ்பத்திரியில காட்ட வந்தாராம்.சுகரோ, என்னவோ தெரியல” என்றாள்.மற்ற விஷயம் பேசிவிட்டு வைத்து விட்டனர்.
      மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை.இரவு தூக்கம் இன்றி தவித்தாள்.அப்படியென்றால் தவறான எண்ணத்தில் தான் நிகழ்ந்ததா? தவறுக்கான தண்டனையா இது?ஆனாலும் மனம் உவகை கொள்ள மறுத்தது .
        பசுமரத்தாணியாய் ஒரு செய்தி அன்று ஆழமாய் ஆன்மாவில் பதிந்தது ,  ”வினை விதைத்தால் வினை அறுத்தே தீர வேண்டும் “.தினையை விதை, முடியவில்லை என்றால் வினை விதைக்காமலாவது காப்பாற்றிக்கொள் .....என்று.

     

Comments

  1. இதனால்தான் பாதிப்பு என்பதை அந்த பெண்குழந்தை அறிவதைவிட அந்த ஜோசியர் அறியவேண்டியதே அவசியம் தோழி
    ஏன் இதை சொல்றேன்னா
    எனக்கு தெரிந்த நபர் உழைப்பில்லாமல் அடுத்தவன் இயலாமைய பயன்படுத்தி தன் அதிகாரத்தால தினமும் கணிசமான பணம் நேர்மையற்ற முறையில சம்பாரிக்கிறார்
    ஒரு நாள் கடுமையான வாகன விபத்தில மாட்டி 4 லகரம் வரை செலவழித்து மீண்டார் ஆனாலும் ஊனம் அடையாளப்பட்டிருந்தது இருந்தும் அவர் மறுபடியும் அதே முறையிலதான் வாழ்கிறார்
    நேர்மையா வாழணும்னு நினைச்ச நாங்க என்ன நினைக்கிறோம்னா அடுத்தவன் உழைப்பை சுறண்டி இப்படி சம்பாரித்ததாலதான் பணமும் போயி உடலும் போச்சுன்னு,
    ஆனால் அவரோட கண்ணோட்டம் என்னனா "நாம அப்படி மட்டும் காசு பார்க்களை அந்த கஷ்டத்தில யாரிடம் பணம் வாங்குறது"
    இதில நடக்கவேண்டியது என்னனா தண்டிக்கப்பட்டதை தவறு செய்தவன் உணரணும்


    ReplyDelete
    Replies
    1. ஆம். ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கர்மா

பேதை