மூவர்ணம்
மூவர்ணம்
பச்சை
பசேலென்ற வயல்வெளிகளும் ,ஓங்கி உயர்ந்த வானளாவிய நெடிய மரங்களும் ,சூரிய ஒளியில்
மின்னும் வெள்ளி நீரோடைகளும்,ரத்தின கம்பளத்தில் சுருட்டப்பட்ட தங்க பேழையை போல இயற்கை
எழில் மிகுந்து விளங்கும் சிறிய கிராமம் தான் சிகையூர் .தேவ தச்சன் மயன்
உருவாக்கியதோ என காண்போரை வியக்க வைக்கும் அழகிய மருதம் சூழ்ந்த குறிஞ்சி நிலம். ஊர்
தலைவரின் பெரு முயற்சியால் எழுந்த கல்வி கூடமும், நூலகமும் ஊர் முன்னேற்றத்தின்
முதல் படி.
ஈசன்,அகிலன்,இருளன் மூவரும் இணை பிரியாத நண்பர்கள்.இவர்களுக்கு
படிப்பிலும்,விளையாட்டிலும் இன்ன பிற செயல்களிலும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல
எனும் கடும் போட்டியாளர்கள் சிகப்பி, நிலா, இலஞ்சி என்னும் உயிர் தோழிகள் .எவ்வளவு
போட்டி இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை.அந்த அறுவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காத
வளமான நட்பு பாராட்டி வந்தார்கள்.அந்த 14 வயதுக்கே உரிய குறும்புத்தனமும்,விளையாட்டுத்தனமும்,போக்கிரித்தனமும் எல்லை
மீறாமல் ரசிக்கும்படியாகவே இருந்தது.பள்ளியிலும்,ஊர் மக்களிடமும் நற்பெயருடன்
இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப துள்ளலுடன் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் வகுப்பறையில் குறிப்பெடுத்துக்
கொண்டிருந்த அகிலன் எதேச்சையாக இடதுபுறம் திரும்ப, அனலிலிட்ட புழுவாய் சிகப்பி
துடித்து கொண்டிருப்பதை பார்த்தான்.தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும்
முற்றும் பார்வையை சுழற்றினாள் தன்னை அறியாமலே தன் கைகளை பிசைந்தபடி, மதகை உடைத்து
வெளியேற காத்திருக்கும் வெள்ளம் போல கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.அந்திப்பொழுதின்
கீழ்வானமாய் கண்கள் சிவந்திந்தன.நிலாவை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு தமிழ்
ஆசிரியர் அனுப்பி இருந்தார்.இலஞ்சியும் பள்ளிக்கு வரவில்லை.அதனால் சிகப்பி கடைசி
பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தாள்.
ஒரு நிமிடம் அகிலன் தயங்கினான்.நண்பர்களிடம்
சொல்லலாமா வேண்டாமா என்று.பின்னர் ஈசனையும்,இருளனையும் கிள்ளி சிகப்பி இருக்கும்
திசையில் கண் ஜாடை காட்டினான்.ஏதோ சொல்லொணா துயரில் இருக்கிறாள் என்பது புரிந்தது.
‘பொய்மையும்
வாய்மையிடத்த புறை தீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என்னும் குறளை மனதில் சொல்லி
கொண்டு, எழுந்து ”ஐயா,குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்.சிகப்பி,ஈசன் ,இருளன் ஆகியோரை
தலைமை ஆசிரியரை சந்திக்க சொன்னார்.என்னையும் வருமாறு கூறினார்.நான் மறந்தே போனேன்.தயவு
செய்து எங்களை அனுமதியுங்கள்” என்றான்.அவரும் அனுமதித்தார்.
வெளியே வந்த சிகப்பி ஓவென கதறி அழ
ஆரம்பித்தாள்.”என்ன விஷயம்னு சொல்லு செவப்பி, நாங்க ஒதவி செய்யத்தானே புள்ள
இருக்கோம் “என்றான் அகிலன்,”அப்பா மல மேல வெடி வச்சி கல்லு ஒடக்கிறப்ப ஒரு பெரிய
துண்டு கல்லு தலையில விழுந்துடிச்சு.தர்மாஸ்பத்திரி ல சேத்துருக்கோம் ரத்தம்
நிக்கவே இல்லையாம்.ஒடனே 0 – ரத்த வகை வேணுமாம்.மாமா எவ்ளோ முயற்சி பண்ணியும்
கெடைக்கலயாம்” அழுகையினூடே சொல்லி முடித்தாள்.
“அய்யயோ என் ரத்த வகை என்னன்னே
தெரியாம இருந்திருக்கேண்டா நா ஒரு லூசு பய” என்றான் இருளன்.அகிலன் “கவலைய விடு செவப்பி
நம்ம தலைமை ஆசிரியர் 0 – ரத்த வகை தான் .அவருக்கு ரத்த தானம் வழங்கும்
பழக்கமும் இருக்கு.நாலு மாசத்துக்கு முன்னாடி கூட பக்கத்து ஊர்ல நடந்த ரத்த தான
முகாமுக்கு போயி ரத்தம் குடுத்தாரு.நா அவர் கூட போயிருந்தேன்.நீ கண்ண தொடச்சிட்டு
தைரியமா கெளம்பு .நாங்க பின்னாடியே ஐயாவை கூட்டிட்டு வரோம்” என்று உறுதி
அளித்தான்.தலைமை பண்பும்,தன்னிகரில்லா துணிச்சலும் கொண்ட அகிலன் சொல்லிய வண்ணம்
செவ்வனே செய்து முடித்தான்.
ஈசனும்,இருளனும்,”டேய்,ஆறு
விரல்காரா, சூப்பர்டா ,நீ எப்பவுமே கில்லிடா”என ஆர தழுவி கொண்டனர்.அதற்கு
அகிலனும்,”எலே,இருளா நீ தாண்டா தல, இஸ்கூலுக்கும் வந்துட்டு சாயந்திரம் வேலெக்கும்
போறியே. இப்பவே துட்டு சம்பாரிக்க ஆரம்பிச்சிட்ட”.இருளன் அச்சு கோர்க்கும்
இடத்தில் குடும்ப தேவைக்காக வேலை செய்பவன்.குழந்தை தொழிலாளர் என்று வேலையை விட்டு
நிறுத்தப்பட்டதால் அரை வயிற்று கஞ்சிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது பள்ளிக்கு போய்
வருவதால் திரும்பவும் வேலைக்கு சேர்த்து கொள்ளப்பட்டான்.
முழு பரீட்சைக்கு தேதிகள்
அறிவிக்கப்பட்டது.இரவும் பகலுமாக படித்து பரீட்சையை முடித்துவிட்டார்கள்.ஒரு மாத
விடுமுறை அறிவிப்பும் ,அறிவுரைகளும் வழங்கப்பட்டது.நண்பர்கள் மூவரும் தினமும்
ஏதாவது ஒரு நேரத்தில் கூடி அளவளாவி வந்தனர்.ஆணும் பெண்ணும் பள்ளியில் பழகுவது
போன்ற சுதந்திரம் ஊருக்குள் இல்லை.கிராமத்திற்கே உரித்தான எழுதப்படாத கட்டுபாடுகள்
உண்டு.ஒரு நாள் இலஞ்சி வீட்டில் உறவினர்களின் கூட்டமும், பந்தலும் மைக் செட்டுமாக
விழாக்கோலமாக இருந்தது.ஈசனின் தாய் மூலம் இலஞ்சி பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என்று
தெரிய வந்தது.இதே போல அடுத்தடுத்து நிலாவின் வீட்டிலும் சிகப்பியின் வீட்டிலும்
விழாக்கோலம் கொண்டது.அதனால் தோழிகளை சந்திக்கும் வாய்ப்பு அறவே இல்லாமல் போனது
நண்பர்களுக்கு.
நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்ததது.ஒரு
நாள் திடீரென்று இருளன் அச்சு கோர்க்கும் போது இயந்திரத்தில் விரல் சிக்கி
உருத்தெரியாமல் நசுங்கிவிட்டது.ஈசனும்,அகிலனும் அவனை சைக்கிளில் வைத்து அப்பா
அம்மாவுக்கு கூட சொல்ல வேண்டாம் என்று நண்பனின் வாயை அடைத்து ஆஸ்பத்திரிக்கு
கொண்டு சென்றார்கள்.தலைமை மருத்துவர் பரிசோதித்து விட்டு “கட்டை விரலாச்சே ,இந்த
விரல் இல்லாம எழுதுவது மத்த முக்கிய வேலைகள் செய்ய கஷ்டமாச்சே” என்றார். தயக்கம்
என்பதே சிறிதும் இன்றி,அகிலன்” டாக்டர் ,இங்க பாருங்க எனக்கு 6 விரல் இருக்கு.ஒன்றை அறுவை சிகிச்சை செய்து அவனுக்கு
வச்சிடுங்க.அதுவும் அதிர்ஷ்டவசமா எனக்கு கட்டை விரல்தான் 2 இருக்கு.அவனுக்கு தேவப்படும்னு தான் கடவுள் எனக்கு ஆறு வெரல் குடுத்திருக்காருனு
நெனக்கிறேன்”.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....,இருளனும் ஈசனும் அகிலனை ஆரத்
தழுவிக்கொண்டனர் கண்ணீருடன்.”நண்பேன்டா” என்று உரக்க கத்தினர்.”மெல்லடா இது
ஆஸ்பத்திரி” என்று நண்பர்களை அடக்கினான் அகிலன்.மருத்துவர் “தம்பிகளா ,இது விளையாட்டு
இல்ல.அப்பா அம்மா சம்மதத்துடன் தான் செய்ய முடியும்”என்றார்.”சார் ,கவலைய
விடுங்க.என் அப்பா எனக்கு முன்னாடி அவரோட வெரல தரேன்னு சொல்லுவாரு”என்றான் அகிலன்.பெற்றோர்களின்
சம்மதத்தோடு அறுவை சிகிச்சை முடிந்தது.இருளனும்,அகிலனும் விரலில் கட்டோடு
ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வருவதை பார்த்த ஈசன்,”என்னங்கடா ,ரெண்டு பேருக்கும்
நக சுத்தியா,எலுமிச்சம்பழம் வேணுமா சொருவி விடுறேன்”என்று கல கலவென
சிரித்தான்.இருளனும் ,அகிலனும் “டேய்ய் “என்று விரட்டி கொண்டே அவன் பின்னே
ஓடினர்.பெற்றோர்கள் எப்பவும் இத மாதிரியே ஒத்துமையா இதுக இருக்கணும் என்று
சொல்லிக்கொண்டனர்.
மேலும் நாட்கள் கழிந்தன.விடுமுறை
நாட்கள் 15 நாட்கள் ஓடியதே தெரியல.இங்க பாருடா இருளனுக்கு
அரும்பு மீசை வருது என்று அவன் மேலுதட்டை
பிடித்து இழுத்தான் ஈசன்.”பாருலே, இஸ்கூல் தொறக்கறத்துக்குள்ள எனக்கும் மீச
வளந்துடும்.என் அப்பாவோட ப்ளேட் எடுத்து லேசா சொரண்டி விட்ருக்கேன்ல.என்னடா நீ
ஒண்ணுமே சொல்லாம ஏதொ யோசிச்சிட்டு இருக்க.”என்றான் அகிலனை பார்த்து.”ஒண்ணும்
இல்லடா” என்றான் நிலை குத்திய பார்வையுடன் .முகத்தில் என்றும் இல்லாத ஒரு வாட்டம்
இருப்பதை நண்பர்கள் கவனிக்க தவறவில்லை.”நா போறேண்டா “ என்று திடீரென எழுந்து
ஓடிவிட்டான்.ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
இருளன் அச்சு வேலையை
முடித்துவிட்டு நண்பர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வந்தான்.ஈசன் மட்டும்
இருந்தான்.”எங்கடா,அகிலன் எங்க ? என்றான். ”தெரியலடா,அவங்க வீட்டுக்கு போய்ட்டு
தான் வந்தேன் .நம்மள பாக்க போறதா அவங்க அம்மாட்ட சொல்லிட்டு போனானாம்.” என்றான்
ஈசன்.”அவன் கொஞ்ச நாளாவே சரியில்ல ஒழுங்கா பேச மாட்டேங்குறான்.தனியா போயி
ஆத்தங்கரையில உக்காந்துக்கறான்.எதா இருந்தாலும் நம்ம கிட்ட சொல்லாம இருக்க
மாட்டானே?.”.சரி நாளைக்கு அவன் வீட்டுக்கே போயி பேசுவோம்.”
ஒரு வாரமாகியும் எங்கேயும் அகிலனை சந்திக்க
முடியவில்லை.வீட்டுக்கு சென்றால்,”இவ்வளவு நேரம் இங்க தான இருந்தான்.பின்னால
வரப்புல போயி பாருப்பா “என்றார் அகிலனின் தாய்.ஈசனுக்கும் ,இருளனுக்கும்
சந்தேகமும்,வருத்தமும் ,ஒரு விதமான பயமும் சேர்ந்து கொண்டது.”என்னடா இது நமக்கு
ஒரு பிரச்சினை என்றால் தீர்த்து வைக்கும் அகிலனுக்கே என்னாச்சுன்னு தெரியலையே”.இதை
எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
அடுத்த நாள் மூச்சிரைக்க
ஓடி வந்தான் ஈசன் ”டேய் இருளா, நம்ம செல்லப்பன் அகிலன சிகப்பியோட தோப்பில பார்த்தானாம்.சிரிச்சு
சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்களாம்”.”வாய மூடுடா எவனோ எதுவோ சொன்னா
நம்பிடுவியா?.சிகப்பி பெரிய மனுஷியாகி 10 நாள் தான் ஆவுது.அது
எப்புடி வெளிய வரும்.இஸ்கூலுக்கு தான் நேரா வரும்”என்றான் இருளன்.”ஆமாண்டா இத நா
யோசிக்கவே இல்ல” என்று வழிந்தான் ஈசன்.”நம்ம அகிலன் தங்கம் டா அவன சந்தேகபடாதடா
இனிமே.”
மேலும் இரண்டு நாட்கள்
அகிலனை தேடுவதிலேயே கழிந்தது.சந்திக்க முடியவில்லை.மறுநாள் லேசான சோகம் கப்பிய
முகத்துடன் ஈசன் “இருளா ,செல்லப்பன் சொன்னது உண்மைதாண்டா”என்றான்.கோபத்தில் கண்கள்
சிவக்க “உனக்கு எப்டி சொன்னாலும் புரியாதாடா” என்று ஆத்திரம் தாங்காமல் ஈசனை பளாரென
அறைந்து விட்டான்.ஈசன் சுருண்டு கீழே விழுந்தான்.”அவன பத்தி இன்னும் ஒரு வார்த்த
தப்பா பேசின அவ்வளவு தான்” என்றான். கோபம் குறையாமல்.”இருளா ஒன் கோவம் எனக்கு புரியுதுடா
கொஞ்சம் நா சொல்றத முழுசா கேளு.நா நம்ம அகிலன தப்பா பேசுவனா.நானே என் கண்ணால
பாத்தேன்.நாளைக்கு வா ரெண்டு பேரும் போவோம் “ .அவன் சட்டையை பிடித்து “என்னடா
சொல்ற.நம்ம அகிலனும் சிகப்பியுமா?லவ் பண்றாங்களாடா.நம்ம கிட்ட ஏண்டா மறைக்கணும்.”கேக்கும்
போதே இருளனின் கண்களில் கண்ணீர்.”நாம அவன கையும் களவுமா புடிச்சு நாளக்கி
கேப்போம்டா”.
மறுநாள் தோப்பில் ஒரு
மரத்தின் பின்னே ஒளிந்தபடி கண் கொட்டாமல் காத்திருந்தனர் இருளனும் ஈசனும்.சற்று
நேரத்துக்கு எல்லாம் கொலுசொலியும் சிரிப்பொலியும் ஒரு சேர கலகலத்தது.இருளனால் தன
கண்களை நம்ப முடியாதவனாக அதிர்ச்சியும் திகைப்புமாக ஈசனின் பக்கம் பார்வையை
திருப்பினான்.அவனுக்கு இது இரண்டாவது முறை என்பதால் அவ்வளவு அதிர்ச்சி அடையாமல்
கவலை தோய்ந்த முகத்துடன் செய்வதறியாது அமர்ந்திருந்தான்.அவர்களை சற்று
தொலைவிலிருந்து கண்காணித்தனர்.சிரித்து சிரித்து அகிலன் பேச பேச என்ன பேசுகிறான்
என்பதை தூரத்திலிருந்து யூகிக்க முடியாமல் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற நண்பர்கள்
ஒரே நேரத்தில் மறைந்திருந்த இடத்திலிருந்து வேகமாக வெளிப்பட்டு ஆவேசமாக அகிலனை
நோக்கி பாய்ந்து சென்று சட்டையை பிடிக்க எத்தனிக்கையில் சற்றும் எதிர்பாராத
வகையில் அகிலன் ஓடிச் சென்று சிகப்பியின் பின்னால் நின்று கொண்டு தலை தாழ்த்தி தரை
நோக்கி அரை பார்வையும்,அச்சம் கலந்த அரை பார்வையால் ஈசனையும் இருளனையும்
நோக்கினான்.தான் காண்பது கனவா நினைவா என நண்பர்கள் குழம்பி அகிலனின் செயலால்
ஸ்தம்பித்தனர்.சுதாரித்து கொண்டு ,”என்ன நடக்குது இங்க ,நீ எங்களுக்கு துரோகம்
பண்ணிட்டடா,செவப்பி நீ கூட சொல்லல இல்ல.நீங்க லவ் பண்றீங்களா?எப்படி எங்கள ஏமாத்த
மனசு வந்துது.”ஆவேசமாக சிகப்பியை அடிக்க ஓடினான் இருளன்.”அவ மேல எந்த தப்பும்
இல்ல” மெல்லிய குரலில் அகிலன் சொன்னான் அவள் பின்னாலிருந்து சற்றும் நகராமல்.அதை
காதில் வாங்காதவனாய் சிகப்பியை நெருங்கினான்.
வெடித்து சிதறிய அழு குரலுடன் இரு
கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு விக்கி விக்கி பெருங்குரலெடுத்து அழுத அகிலன்” நா
உண்மைய சொல்லிடறேன்.ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா,,இவங்க மூணு பேரும் பெரிய
பொண்ணுங்களா ஆன பத்து நாளைக்கு அப்புறம் நீங்க மீச மொளைக்கிறது பத்தி
பேசினீங்களே?””அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்” ஆவேசமாக கேட்டான்
இருளன்.”இருக்கு”பொறுமையாக தொடர்ந்த அகிலன்.நம்ம வயசு பருவம் மாறுற
வயசில்லியா.எனக்கு ஒரு நாள் ரொம்ப கொழப்பமா மனசெல்லாம் பெசயர மாதிரி
இருந்துது.எனக்குள்ள ஏதொ ஒரு இனம் புரியாத மாற்றம். நா ஒரு பொண்ண போல தோணுது
எனக்கு.வளையல்,தோடெல்லாம் போடணும் போல ஆச வந்திருக்கு.ஒங்க கிட்ட சொல்ல என்னமோ
தயக்கமா இருந்துச்சு.அதுனால ஒரு நாள் செவப்பி வீட்டுக்கு யாருக்கும் தெரியாம போயி
இதெல்லாம் சொன்னேன்.அவ எனக்கு ஆறுதல் சொல்லி என்னோட மாற்றத்துக்கான விளக்கத்தை
கேக்க நமக்கு விரல் ஆபரேஷன் பண்ணின டாக்டர் கிட்ட யாருக்கும் தெரியாம கூட்டிட்டு
போனா.நான் பையனிலேந்து பொண்ணா மாற ஆரம்பிசிட் டேனு சொன்னாரு....”முடிக்க முடியாமல்
கேவி கேவி அழ ஆரம்பித்தான்.”நீ சொல்றதெல்லாம் நெஜம்மா “ உடைந்த குரலில் கண்ணீருடன்
கேட்டான் இருளன்.”ஈசா,இருளா நீங்க இனிமே என்னோட பழகாதீங்க,போயிடுங்க “கண்கள்
சிவக்க கதறினான்.கண்களை துடைத்து கொண்டு எழுந்த ஈசன்,”நாங்க ஏன்
போகணும்,சிகப்பி,நிலா,இலஞ்சியோட சேத்து நீயும் எங்க தோழி சரியா அகிலா,”புன்முறுவல்
பூத்த நொடி சலசலப்பு கேட்க நால்வரும் திரும்பினர்.கண்ணீருடன் ஓடி வந்த அகிலனின்
தாய் அவனை வாரி அணைத்து,”நீ ஆணா இருந்தா என்ன பொண்ணா இருந்தா என்ன ,என் செல்லமே
பத்து மாசம் சுமந்த எனக்கு நீ எப்பவுமே குழந்தை தான்.நீ சிகப்பியோட தோப்புக்குள்ள
வரத பாத்துட்டு பின்னாலேயே வந்தேன்.நீங்க பேசினதெல்லாம் கேட்டுட்டு தான்
இருந்தேன்.இந்த மாதிரி நண்பர்கள் இருக்கும் போது நீ நெறைய சாதிக்கலாம்.மனச
உட்டுடாத கண்ணு”.ஈசனிடம் திரும்பி,”ரெண்டு பொம்பள புள்ளையவும் பத்திரமா வீட்டுல
கொண்டாந்து விட்டுடணும் ,என்ன?”என்றார்.”போங்கம்மா” என்ற கொஞ்சல்
அகிலனிடமிருந்து.”சரி வாங்க போவலாம்”என்று இருளன் ,அகிலனின் தோளில் கை போட,லேசாக
அவன் கையை தட்டி விட்டு,புன்சிரிப்புடன் இடை நெளித்து தனக்கு சௌகரியமான
நடையில்,முகமூடி கிழித்தெறிந்து நடக்க ஆரம்பித்தா”ள்” அகிலன் எனும் “அகிலா”.
அரவாணிகளை ஆதரிப்போம்,அரவணைப்போம்,
ஏனெனில் அவர்களும் மனித பிறப்புகளே.
-கதை முற்றும்-
- கனவுகள் தொடரும்-
- தாமரை -
Comments
Post a Comment