கர்மா

                                    

                            
          வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,தினை விதைத்தவன் தினை அறுப்பான். விதையின்(கர்மா) அறுவடை(பலன்) நாளானது ஒவ்வொரு விதைக்கும் மாறுபடும் .சில விதை உடனே முளைக்கும், சிலது வருடக்கணக்கில் காத்திருந்து முளைக்கும்.
    மரம்,செடி,கொடி,வேளாண்மை போலில்லாமல்  கர்மாவில் துரதிஷ்டவசமாக, விதைக்கப்படும் எல்லா விதைகளும் முளைத்தே தீரும். அறுவடை செய்யவே பணிக்கப்படும்.அறுவடைக்கான கருவி அவரவராகவே இருக்கலாம் அல்லது வேறு ஒருவராக இருக்கலாம் .கர்மா என்பது விதைப்பது மட்டுமல்ல ,விதைத்ததன் பயனை அனுபவிப்பதும் தான்.  
   ஜனனம் ,[வாழ்க்கை] பயணம் , மரணம், மறுஜென்மம் (மறுஜென்மம் உண்டா என்பதற்கு  சான்று கொடுத்து நிரூபிக்கவோ அல்லது ஆதாரமற்றதை பொய் , புரளி என ஒதுக்குவதற்கோ இது அறிவியல் இல்லை) என வாழ்வை  அனைத்து நிலைகளிலும் நிர்ணயிக்கும் விசையானது இந்த கர்மா.ஒருவருக்கு கர்ம வினையின் ஆழத்தை விளக்கி புரிய வைப்பது கடினம்.வாழ்வின் நிகழ்வுகளை ஆராய்ந்து ,அறிந்து ,தெரிந்து ,தெளிந்தால் மட்டுமே உணர முடியும்.உள் உணர்வால் அறிய முடிந்தவற்றை மட்டுமே மனம் முழுமையாக அங்கீகரித்து ஏற்று செயல் படும்.       
         ஒருவரால் நாம் மிகக் கொடிய துன்பத்திற்கோ இழப்பிற்கோ அவமானத்திற்கோ ஆளாகும் போது இயற்கையாகவே அவர் மீது பகையும் வெறுப்பும் காழ்ப்புணர்வும் பழி உணர்ச்சியும் ஏற்படும்.ஆனால் அந்த துன்பத்துக்கான காரணம் அவர் அல்லர்.அவர் கருவி மட்டுமே ஆவார் .காரண ‘கர்த்தா’ சாட்ச்சாத் நாமே தான்  என்ற புரிதல் இருந்தால் கரை ஏறுவது எளிது. இந்த புரிதல் உணர்ந்து தெளிவதால் ஏற்பட வேண்டுமே தவிர விரக்தியாலோ, பலகீனத்தாலோ ஏற்படக்கூடாது.
   முயல்பவன் எல்லாம் ஜெயித்ததும் இல்லை.முயலாதவன் எல்லாம் தோற்றதும் இல்லை.     நோய்வாய் பட்டவன் எல்லாம் இறந்து போவதும் இல்லை.நோய் இல்லாதவர் எல்லோரும் நீடூழி சிரஞ்சீவியாய் வாழ்வார் என்ற நிச்சயமும் இல்லை. இதை தான் கர்ம விதியின் பயன் என்போம் . கர்ம பயனின் விசையால் விதி வழி தான் மதி செல்லும்.     
       தீதும் நன்றும் பிறர தர வாரா  ,எண்ணம் போல வாழ் ,...என்று சொல்வது ‘கர்மா தான் வாழ்வியலை தீர்மானிக்கும் என்பதனை சூட்சுமமாக புரிய வைப்பதற்கு’.
      மூக்கின் நீளமும் ,முடியின் நிறமும் ,முழியின் நிறமும், சரும நிறமும் என எல்லாமே நிர்ணயிக்க பட்டவை தான்.                                                                        மரபணு பொறியியல் சில விளக்கங்கள் அளித்தாலும் ,இடியோபத்திக் எனப்படும் காரணி தெரியாதவை மருத்துவ துறையிலும் ,”அதிசய நிகழ்வுகள்” அதாவது யதார்த்தத்திலும் வேதாந்தத்திலும் சித்தாந்தத்திலும் பொருந்தாத, விளக்கத்துக்கு அப்பாற்பட்ட, விவரிக்க முடியாதவை அறிவியலிலும், ஆன்மீகத்திலும் நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது.
     கர்மாவை கையகபடுத்த முடியுமா?.கற்பனையில் ஒரு வில்லாளியை மனதில் கொண்டு வரவும்.அவர் முதுகில் அம்புகளை கொண்ட பை இருக்கிறது.கையில் வில்லில் நாண் ஏற்றப்பட்டு அம்பை எய்வதற்கு தயாராய் இருக்கிறது.தூரத்தில் எய்துவிட்ட அம்பு கிடக்கிறது.இது  முறையே சஞ்சிதா ,க்ரியாமானா /ஆகாமி ,ப்ராரப்தா எனப்படும்.எய்துவிட்ட அம்பை திரும்ப பெற முடியாது.அது போல நடந்து முடிந்த கர்மா வான ப்ராரப்தாவை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியவை முதுகில் பையில் வைத்திருக்கும் அம்புகளான செய்ய போகும் எதிர்கால கர்மாவான சஜஞ்சிதாவையும்,எய்ய தயாராக இருக்கும் அம்பான நிகழ்கால கர்மாவான ஆகாமியும் தான் .நல்ல கர்மாக்களின் பலனாக கிடைக்கும் பயனை சமஸ்கிருதத்தில் “அதிர்ஷ்டா” என்பர்.
     நிஷ்கம்ய கர்மா என்று ஒரு வகை உண்டு. மகாபாரதத்தில் இருக்கும் “கடமையை செய் ,பலனை எதிர்பாராதே” என்பது தான் இந்த நிஷ்கம்ய கர்மா..செய்யும் ஒரு செயலுக்கு ஏன் பலனை எதிர்பார்க்க கூடாது என்ற கேள்வி எழலாம் .கடமைக்கும் ,தொழில்/வேலை க்கும் வேறுபாடு இருக்கிறது. வேலை செய்தவனின் வியர்வை காயும் முன் கூலி கொடுத்தலே தர்ம சாஸ்திரம்.  அதனால் வேலைக்கான சம்பளத்தையும் பலனையும் பெறலாம்.ஆனால் தாய் தந்தை ,உடன் பிறந்தோர்,உற்றார்,உறவினர், குருஸ்தானத்தில் இருப்போர்,சமூகம் த்துக்கு செய்யும் வேலைகள் கடமையாகும்.இதற்கு சம்பளமோ,கூலியோ, கைமாறோ எதிர்பார்க்க கூடாது. இதுவே நிஷ்கம்யம்.
கர்மா நிலைப்படும்:        காயிக்கா (உடலால் புரியும் நற்செயல்/தீயசெயல்)  2.வச்சிக்கா (பேச்சால் ஏற்படுத்தும் நல்வினை/தீவினை) 3.மானசீக்கா (சிந்தையில் உதிக்கும் நல்ல எண்ணம்/தீய எண்ணம்.).    
   கர்ம வினை ஒரு பொதுமறை போன்றது.தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாக்கபட்டது.இங்கு தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் சரி என்பது மட்டுமே சரி ,தவறு என்பது தவறே.எந்த பாரபட்சமும் கிடையாது.கர்மா விலிருந்து தப்புவதற்கு குறுக்கு வழி, பரிகாரம் என்று எல்லாம் வாய்ப்பளிக்கப்படவில்லை.ஒரே ஒரு வழி தான் வகுக்கப்பட்டுள்ளது, அது “செய்த ,செய்யும் ,செய்ய போகும் நல்ல /தீய செயல்கள்,சொற்கள்,எண்ணங்களின் பலனை அனுபவித்து கழிப்பதுஅதனால் நல்ல செயல்களை செய்தால் மட்டும் போதாது ,எண்ணத்தில் நல்ல சிந்தனைகளும் ,பேசும் பேச்சில் நல்லனவற்றை பேசி, யாவருக்கும் தீங்கிழைக்காத,  தனக்கு நேரும் கசப்பானவைகளுக்கு நாமே காரணம் என்ற புரிதலோடு பிறவி பெருங்கடல் கடந்து கரை சேர்வோம்.
                         ........ எல்லாம் அவ(னவ)ன் செயல் .......        
                                                                           
          
-- தாமரை குணாளன் --                     

                              

Comments

  1. கர்மா குறித்து மேலும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்
    ஷாகுல் ஹமீது

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக. துளித்தேன் நுனி நாக்கு சுவையே இப்பதிவு.

      Delete

Post a Comment

Popular posts from this blog

மடந்தை

பேதை